Friday, January 4, 2013

My Article on Auditor NRK in Ilakkiyapeedam (Jan13)



எப்போதும் திருநாமம்!  எந்நாளும் தொழில் யாகம்!
(தெரிந்ததும் தெரியாததும்)     - டாக்டர் பாலசாண்டில்யன் 

வலி, வயது, பசி, அயற்சி எதுவும் பாராதாவர் எவரும் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரம் தெரிவித்ததில்லை. அப்படி ஜெயித்தவர்கள், தான் தாண்டி வந்த பாதையை, கடந்து வந்த தடைகளை, பட்ட இடர்களை என்றும் மறப்பதில்லை.
அதனால் தான் அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக
திகழ்கிறார்கள் .

ஜெயித்தவர்கள் என்பதனால் ஜெயிக்க துடிப்பவரை கை தூக்கி நிறுத்துவதை தனது ஒரு தலையாய பணியாக அவர்கள் கருதுகிறார்கள்
கல்விக்கு நிதிஉதவி , ஆதரவு இல்லாதவர்களுக்கு நல்லுதவி, இலக்கிய மற்றும் இறை அன்பர்களுக்கு தத்தம் பணி சிறக்க ஆவன செய்தல், இவை எல்லாம்
இவர்கள் தமக்கு இறைவன் இட்ட பணியாக கருதுகிறார்கள் .

வாழ்வில் நல்லொழுக்கம், நற்சிந்தனை, நற்பணி என தமது பணி வாழ்வினைத் தாண்டி சமூகமே ஒரு பெரு  வீடாக கருதும் சிலர் இருப்பதனால் தான் அக்காலத்தில்  "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்று சொன்னார்கள் .  அப்படிப்பட்ட ஒரு முக்கிய பெருந்தகையாளரை பற்றி இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள போகிறீர்கள் .

எப்போதும் ஒலி தந்து கொண்டிருக்கும் 2-3 கை பேசிகள், அடிக்கடி அடித்து நிற்கும் அலுவலக தொலைபேசிகள், நாளைக்கு நிறைய விசிட்டர்கள் என்று இருக்கும்  பொறுப்பான, மிக சுறுசுறுப்பான, ரொம்ப பிஸியான இவரை அணுகி இவர் பற்றிய சுவையான தகவல்களை சேகரிப்பதே கடினமான காரியமாக தான் இருந்தது .  ஏன் என்றால் இன்று சென்னை, நேற்று மும்பை,  நாளை கொல்கத்தா என மலர் தாண்டி மலர் அமரும் பட்டாம்பூச்சியை போன்றவர் இவர்.

ஒரு கணக்காயர் என்று மட்டும் ஒதுக்கி விட முடியாது இவரைஒரு கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், ஆன்மீகவாதி, கொடையாளர் என பலரைத் தன்னுள் உள்ளடக்கி இருக்கும் இவர் பலருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருவதால் இவர் நிச்சயம் ஒரு பிரபலம். பல இலக்கிய, சமூக , ஆன்மிக, நிர்வாக மற்றும்  வர்த்தக அமைப்புகளில் நெருங்கிய தொடர்புடையவர் .

நேர்பார்வையில் மாறாத புன்னகை, நெற்றி திருநீறு , வாய் நிறைய "கிருஷ்ணனின்" நாமம், ரிச் அண்ட் ஸ்மார்ட் என்று ஆடை தோரணை, இவை மட்டுமாஇவர்  மேற்பார்வியில் பணி புரியும் பல புத்திசாலிகள். இப்போது தெரிந்திருக்கும் நாம் யாரைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம் என்று, ...!


ஆமாம் உங்கள் யூகம் சரி தான். ஆடிட்டர்   NRK  அவர்களைப் பற்றித் தான்....! ஆனால் இவர் பற்றி உங்களுக்கு தெரியாத சுவையான சில விறுவிறுப்பான வித்தியாசமான எழுச்சியூட்டும் தகவல்களை தரும் முயற்சி தான்
இந்த கட்டுரை .....!


தஞ்சாவூர் மாவட்டத்தின்  நெல்லிச்சேரி யை  சொந்த ஊராக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். N.R. ராஜகோபால ஐயர் அவர்களுக்கும் கமலா அம்மா அவர்களுக்கும் பிறந்த இவர் தமது ஆறரை வயதிலேயே தந்தையை இழந்து தவிக்கும் நிலைக்கு உள்ளானார்.  வாழ்க்கை போராட்டம் என்பது அவருக்கு சிறு வயது முதலே தொடங்கியது.

புரசை MCT பள்ளியில் படித்து, பிறகு லயோலா கல்லூரியில் B.Sc கெமிஸ்ட்ரி படித்து முடித்த பின் CA படிப்பில் இணைந்தார்அப்போது ஆர்டிகிள் பயிற்சி மூன்று ஆண்டுகள் முடிக்க வேண்டிய தருணம். எத்தனையோ அலைந்து திரிந்தும் அந்த பயிற்சியில் இணைய முடிய வில்லை சென்னையில்.

அந்த நேரம் சமய சஞ்சீவியாக இவருக்கு உதவியது இவரது பெரியம்மாவின் மகன் சிவராஜன்கொல்கத்தாவில் தனக்குத் தெரிந்த T.S. வெங்கடேசன் FCA (ஷா  வாலஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர் ) அவர்கள் மூலம் இவரை  93 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க Ford Rhodes Parks & Co நிறுவனத்தில் அந்த வாய்ப்பினை வாங்கிக் கொடுத்தார்.  

இதில் மிக சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் அதே போர்ட் ரோட்ஸ் நிறுவனத்தில் பிராந்திய பார்ட்னர் ஆக இன்று திரு NRK நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தான்.

1980 இல் தமது ஆடிட்டர் வேலையைத் தொடங்கியவர் 1983 இல் முழு நேர நிறுவனம் தொடங்கி (N.R.Krishnamoorthy and company) தனது  பணி வாழ்வை தொடர்ந்தார்.   கிட்டத்தட்ட 25 திறமைசாலிகளை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. அவர்கள் எல்லாம் இன்று இந்தியா மட்டுமின்றி  ஆஸ்திரேலியா  ,  துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி நிற்கின்றனர்.
சிலருக்கு ஜாதகத்தில் குரு பலன் என்பார்கள். ஒரு வேளை  இவருக்கும் அப்படி இருந்திருக்கலாம் . இவருக்கு 1980 ஆம் ஆண்டு பணி வாழ்வில் மட்டும் வெற்றி பிறக்க வில்லை. தனி (சொந்த) வாழ்விலும் ஜெயம் பிறந்தது. அதாவது இவர் திருமணம்.  ஜெயா அவர்கள் இவரது இல்லத்தரசியாக வந்து இணைந்த ஆண்டும் அது தான்.  இவர் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி புரிகிறார்.

 மனமொத்த வாழ்வு எல்லோருக்கும் அமைந்து விடாது . சொந்த வாழ்வில் இன்பமாக இல்லாதவர் எவரும் சமூக மற்றும் பணி வாழ்வில் சிறந்து விளங்கியதாக சொல்ல முடியாது. இவருக்கு பெயர், பெருமை என அனைத்து  செல்வங்களும் கொணர்ந்து சேர்க்கும் நல்லதொரு மனைவி  அமையபெற்றது தனது பாக்கியம் என்கிறார் இவர்.

எப்போதும் காலை  4 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உள்ள இவர் , நம்மைப் படைத்தவனுக்கு நன்றி சொல்லும் நேரம் அது தான் என் நம்பும் இவர்,  தினசரி பிரார்த்தனை பூஜை என்று பக்தி மனம் கமழ தமது வாழ்நாளை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  ஆன்மிக சொற்பொழிவு கேட்பது இவருக்கு பிடித்த காலை பொழுது போக்கு.

தேவை என்றால் தானே சமைக்கவும்   தெரிந்து  வைத்திருக்கும்  இவர் அதிகம் வெளியில் சாப்பிடுவதில்லை (வெளியூர் செல்லும் சமயம் தவிர ). இவர் சமையலில் இவர் மிகவும் ரசித்து சாப்பிடுவது  வத்தக்குழம்புபெரும்பாலும் வீட்டு சாப்பாடே இவரது மதிய உணவு.

சின்ன வயதில் இவருக்கு MGR அவர்களை மிகவும் பிடிக்கும். இவர் அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு என்ன தெரியுமா? "தர்மம் தலை காக்கும்".
அதனால் தானோ என்னவோ தந்தை இல்லாத பள்ளி குழந்தைகளுக்கு  இவருடைய ஜெயக்ருஷ்ணா மிஷன் மற்றும் ஜெயக்ருஷ்ணா சாரிடபிள்  டிரஸ்ட் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார்.  குடும்பத்தோடு இவர் அடிக்கடி செல்லுமிடம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்.

இவருக்கு பிடிக்காதது சோம்பி இருத்தல். அடுத்த பிடிக்காத ஒன்று 'ஸ்போர்ட்ஸ்'.
இவர் மதிக்கும் அல்லது போற்றும் தம்பதியர் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சாந்தா வரதராஜன் தம்பதியர் ஆகும் . அடுத்தது இவர் போற்றும் ஒரு முக்கிய எழுத்தாளர் எழுத்துலக  பீஷ்ம பிதாமகர் உயர்திரு டாக்டர் விக்கிரமன் அவர்கள்.

இவருக்கு மிகவும் பிடித்தது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் தத்துவங்கள் மற்றும் போதனைகள் . அதனால் தானோ என்னவோ ஆடிட்டர் NRK அவர்கள் மதுரை அருகே ரமணர் பிறந்த திருச்சுழி என்கிற இடத்தில  நிலம் வாங்கி உள்ளார். எதற்கு தெரியுமா? தனது  ஜெய கிருஷ்ணா  மிஷன் என்ற டிரஸ்ட் மூலம் "கமலாலயம்" என்ற முதியோர் இல்லத்தை அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் நிறுவ உள்ளார். குறைந்தது 10 ஆதரவற்ற முதிய ஜோடிகளை தமது தாய் தந்தையாக பாவித்து கவினிக்க வேண்டும் என்பது இவரது நோக்கும்  ஆர்வமும் .

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்களின்  நூல்களை வெளியிட்டு சிறப்பித்துள்ள  இவர் தம் முதல் கவிதை தொகுப்பு "கவிதை முத்துக்கள்" என்கிற நூலை காஞ்சி பெரியவர் முன்னிலையில் வெளியிட்டார்.  இவர் தம்   அடுத்த கவிதை  நூல் விரைவில் வெளியாக உள்ளது.  தமிழில் 100 க்கும் மேற்பட்ட கவிதைகளும், ஆங்கிலத்தில் 50 க்கும் மேற்பட்ட மேற்கோள்களும் எழுதி உள்ளார். வெகு நாட்கள் இவரது கவிதைகள் 'மாம்பலம் டைம்ஸ்' வார இதழிலே  பிரசுரம் ஆகி வந்தது. அதன் பிறகு பல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன.  சிறந்த நூல்களுக்கு NRK விருது கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி கௌரவித்து வருகிறார்  இந்த இலக்கிய ஆர்வலர்.  உரத்த சிந்தனை அமைப்பின் புரவலராகவும்  , எழுத்தாளர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினராகவும் உள்ளார்

ஆன்மிகத்தில் மிக்க ஈடு பாடு கொண்ட இவர் முதல் ஐந்து வருடங்கள் "சிவா சிவா" என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகள் "முருகா' என்றும் வாய் ஓயாமல் சொல்லத் தொடங்கியவர் கடந்த ஆறு ஆண்டுகளாய் ஒரு ஆத்ம உந்துதல் காரணமாக "க்ருஷ்ணா  க்ருஷ்ணா  " என்று சொல்ல  தொடங்கி  விட்டார்.  இது இவரது ஒரு ட்ரேட் மார்க் ஆகவே மாறி விட்டது. இந்த இறை சிந்தனை இவருக்கு பல முறை நல்லவற்றை மட்டுமே வாழ்வில் கொண்டு சேர்த்திருக்கிறதுஎன்றால் மிகையாகது .  ஒரு முறை இவர் சென்னை மவுண்ட் ரோடில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அந்த ஆட்டோ அப்படியே கவிழ்ந்து விட்டது. ஆனால் எதுவும் நடக்காதது போல இவர் எழுந்தார். அதே ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்து தனது பிசினஸ் கிளையன்ட் அலுவலகம் போய் சேர்ந்தார். அந்த அதிசய சம்பவம் இவருக்கு ஒரு மன நெகிழ்ச்சி என்று கூட சொல்லலாம்.

எந்த கடமையையும்  கவலையாக பாவிப்பதில்லை, காலத்தின் கட்டங்களை கஷ்டங்களாக பாவிப்பதில்லை இவர். ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்...மற்றும் வாழ்வதற்கே சம்பாதிக்க வேண்டும், சம்பாதிப்பதற்காக வாழக் கூடாது என்கிற கோட்பாட்டினை முறையாக கடைபிடித்தால் மன அழுத்தம் இல்லா  வாழ்வு வாழலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை.

இவர் எழுதிய கவிதை வரிகளில் இவருக்கு மிகவும் பிடித்தது சில:

-"வாழும் வரை வாழ்ந்து விடு துன்பத்தில் போராடி
விடியும் வரை காத்து விடு இன்பத்தில் நீராடி"

- "புகழைத் தேடி அலையத் தேவை இல்லை
 உனக்கென உலகமொன்று சமைத்துக் கொள்  - அதனுள்ளே
 உன் வாழ்வை அமைத்துக் கொள் "

- "சேவை செய்து வாழ்தலே வாழ்வின் கலை
சேவை செய்து வாழ்ந்து விட்டால் அமைதியே உன் மனநிலை"

அரிய நல் மனிதரை சந்தித்த திருப்தியோடு கிளம்பும் போது நிறைவாக ஒன்று கேட்டேன் ..."இளைஞர்களுக்கு தங்கள் செய்தி என்ன?"
உடனே சொன்னார் கவிதை வழியாகவே ஒரு சிறந்த பதிலை .
."எதிர்ப்பதும் எதிர்பார்ப்பதும் தவறே ...கொடுப்பதும் விட்டுக் கொடுப்பதும் தவமே...!"

நல்ல ஒரு  கவிஞரை, சேவை செம்மலை, அண்மையில் அறுபது கண்டவரை, ஊர் அறிந்த ஆடிட்டரை  நீங்களும் போற்றுங்கள்,  வாழ்த்துங்கள்  அவர்  பணி தொடரட்டும் என்று...!

க்ருஷ்ணா   க்ருஷ்ணா ...!

1 comment:

  1. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    ReplyDelete